நாட்டில் 46,000 குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர் எனவும் அரசு சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
குழந்தை பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.
குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய பிரேமதாச, பல பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் நீதி பெறவில்லை என்றும், உரிய நிவாரணத்தை உறுதி செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த தேசிய குழந்தை பாதுகாப்பு கொள்கையை, தற்போது அரசாங்கம் 2029 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இவ்வாறு ஒத்திவைக்கப்படுவது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது உட்பட, குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கைக்கும், தனது கட்சி நிபந்தனையின்றி ஆதரவளிக்கும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போது நீதிமன்றங்களில் சுமார் 4,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும், 46,000 முறைப்பாட்டாளர்களுக்கும் நீதியை உறுதி செய்யவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் ஜனாதிபதியின் கீழ் ஒரு விசேட செயலணியை அமைக்க வேண்டும் எனவும், இந்த விடயத்தை அரசியல்மயமாக்க கூடாது என்றும் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தானும், ஐக்கிய மக்கள் சக்தியும் நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவோம் என்று அவர் கூறினார்.







