அரசாங்கம் நிர்ணயித்துள்ள உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில், நாட்டு நெல் கிலோ ஒன்றிற்கு 120 ரூபாவிற்கும், சம்பா 130 ரூபாவிற்கும், கீரி சம்பா 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வது தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அனைத்து ஆலை உரிமையாளர்களும் அரசாங்கத்துடன் இணைந்து, நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யத் தயாராக உள்ளனர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொறிமுறையை நாம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினால், அரிசியின் விலையைக் குறைப்பதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் குறித்து, இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறும் அடுத்தகட்டக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேநேரம் பிணை முறி கடன் திட்டத்தை (Pledge loan scheme) மேலும் ஓராண்டுக்கு நீடித்தல்,மேலதிக கடன் வசதிகள், சேமித்து வைக்கப்படும் நெல்லை பிணையாக வைத்து கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளுதல், தனியார் களஞ்சியசாலைகள், அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்திற்குத் தனியார் களஞ்சியசாலைகளைப் பயன்படுத்த அனுமதித்தல் உள்ளிட்ட கோரிக்கைக்கை ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“இந்தக் கலந்துரையாடல்கள் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கி, விரைவில் 120 ரூபா விலையில் நெல் கொள்வனவை ஆரம்பிக்க முடியும் என நம்புவதாக” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.







