ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது மற்றும் தடுத்து வைப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில் இணைந்து கொள்ள அனுமதி கோரி பலர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சாலே தனது கைது சட்டவிரோதமானது என கூறி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் டொக்டர் குணதாச அமரசேகர, பேங்கமுவே நாலக தேரர்,தபனே சுமனவன்ச தேரர், திம்புலாகல ராகுலாலங்கார தேரர் மற்றும் குளோபல் ஶ்ரீலங்கன் ஃபோரம் அமைப்பினர், ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் தங்கள் மனுவில் சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த மனுவில், Channel 4 ஆவணப்படம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் ஏற்கனவே அதிகாரப்பூர்வ விசாரணைகளில் நம்பகத்தன்மை இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் சம்பவம் இடம்பெற்ற காலத்தில் சாலே இலங்கையில் இல்லை என விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே காரணம் என பல விசாரணைகள் கூறியுள்ளதாகவும் அதில் சாலேவின் பெயர் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயர்நீதிமன்றம் SC FR 163/2019 வழக்கில் சாலேவுக்கு எதிராக எந்தவித பாதகமான தீர்ப்பையும் வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.








