அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார்.

இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப் பெறவுள்ளது.

5100 கோடி ரூபாய் செலவில் இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பானின் (JICA)ஜைக்கா அமைப்பின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் நன்மைகள், பதவிய, கெபிதிகொல்லாவ, ஹொரவப்பொத்தானை மற்றும் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலக பகுதி மக்களுக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

இப்பகுதிகளில் நாள்பட்ட சிறுநீரக நோய் அதிகமாக காணப்படும் நிலையில் இந்த திட்டம் பாரிய நன்மை பயக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தூய்மையான குடிநீரை வழங்குவது அரசின் அடிப்படை கடமை எனத் தெரிவித்தார்.

மேலும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு, இப்பிராந்தியத்தில் சிறுநீரக நோய் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றையும் இத்திட்டம் தீர்க்கும் என கூறினார்.

மேலும், நீண்ட காலமாக தாமதமான கீழ் மல்வத்து ஓயா திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும், வடமத்திய பிரதான கால்வாய் திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கும், மககந்தர நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கலை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உர மானியம் 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நெல் கொள்வனவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இதேநேரம், இது இலங்கையின் இரண்டாவது பெரிய குடிநீர் திட்டம் என அமைச்சர் வசந்த சமரசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜப்பானின் பொறுப்பு தூதுவர் கமோஷிடா நாவோகி, இத்திட்டம் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவை குறிக்கிறது எனக் குறிப்பிட்டார். அத்துடன் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் அமைப்பு, (ஜைக்கா) திட்டத்தை சரியான நேரத்தில் நிறைவு செய்வதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here