உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை உணவுக்காக மாத்திரமன்றி, பியர், கால்நடைத் தீவனம் மற்றும் பிற பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களின் உற்பத்திக்கும் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அனுராதபுர வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரிசியை உணவு அல்லாத பொருட்களுக்கு பயன்படுத்துவதை தடை செய்திருந்த வர்த்தமானி அறிவிப்பை அரசு நீக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதிகளவில் அரிசி உற்பத்தி செய்யப்படும் காலங்களில் நெல்லுக்கு பெரிய சந்தையை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும், இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் போட்டித்தன்மையான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் பிஸ்கட், கேக் மற்றும் பானங்கள் உட்பட பியர் போன்ற அரிசி அடிப்படையிலான உற்பத்தி பொருட்கள் ஆய்வு மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை வணிகமயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரிசியின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் சந்தைக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்றும், இது நெல் ஆலை உரிமையாளர்களை கடந்து போட்டியை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் மூலம் விவசாயிகளின் அறுவடைக்கான தேவை அதிகரித்து அவர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.








