முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன 63 வயதில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது தலஹேன வீட்டில் தனது உத்தியோகப்பூர்வ துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்துடன் காணப்பட்டார் என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது உடல் தற்போது முல்லேரியாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விக்ரமரத்ன இலங்கையின் 35-ஆவது பொலிஸ் மா அதிபராக பணியாற்றினார். 1986 ஆம் ஆண்டு பரீட்சார்த்த உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸில் இணைந்து தனது சேவையை ஆரம்பித்தார்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பட்டதாரியான அவர், 2019 ஏப்ரல் 28 முதல் ஒரு வருடத்திற்கும் மேலாக பதில் பொலிஸ் மா அதிபராகவும், பின்னர் 2020 நவம்பர் 28 அன்று முறையாக பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டார்.
அவர் 2023 நவம்பர் 27 அன்று அந்த பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மலபே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பேச்சாளர் தெரிவித்தார்.








