மஹர சிறைச்சாலைக்குள் நேற்று (1)ஏற்பட்ட அமைதியின்மையில் ஒரு கைதி உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் வைத்தியசாலை மற்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைக்கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக உறவினர்கள் சிறைச்சாலைக்கு வந்தபோது இந்த சம்பவம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின் ஒரு குழு கைதிகள் சிறைக்குள் இருந்து கல்லெறியத் தொடங்கினர். இதனால் பதற்றம் அதிகரித்தது என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலவரத்தின் போது, சிறை வளாகத்திற்குள் கட்டுமானத்தில் இருந்த தற்காலிக கட்டிடம் ஒன்றை உடைத்து தப்பிச் செல்ல ஒரு குழு கைதிகள் முயன்றதாகவும் கூறப்படுகிறது.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சிறை அதிகாரிகள் சிறை நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காயமடைந்த பல கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு குழு கைதிகள் கலவரத்தின் போது சிறை கட்டிடம் ஒன்றிற்கு தீ வைத்ததாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைக்குள்ளும் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கை பேணுவதற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படை STF, இராணுவம் மற்றும் கடற்படை வீர்கள் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை தங்கள் உறவினர்கள் பற்றி தகவல் கேட்டறிய சிறை வாயிலிலும், ராகம வைத்தியசாலையிலும் கைதிகளின் உறவினர்கள் கூடியிருந்தனர்.
இந்த சம்பவத்தின் முழு விபரங்கள் குறித்து அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








