நிலவும் கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையின் தினசரி வருமானம் ரூபாய் 33 லட்சத்தில் இருந்து ரூபாய் 10-12 லட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்பட்ட தடைகள் காரணமாக ஹட்டன்-இலங்கை போக்குவரத்து சபை டிப்போவின் தினசரி வருமானம் ரூ. 33 லட்சத்தில் இருந்து ரூ. 10-12 லட்சமாக குறைந்துள்ளதாக ஹட்டன் டிப்போ முகாமையாளர் பாலித வீரசூரிய  தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விசேட அறிக்கை விடுத்த டிப்போ முகாமையாளர், சாதாரண நாட்களில் தமது டிப்போவில் இருந்து தூர மற்றும் குறுகிய தூர பேருந்துகள் 75 சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்தார்.

அந்த சந்தர்ப்பங்களில் சுமார் 18,000 – 26,000 பயணிகள் தமது டிப்போவின் பேருந்துகளில் பயணித்தாலும், நிலவும் கடுமையான மழை காரணமாக கடந்த 03, 04, 05 ஆகிய மூன்று நாட்களில் ஒரு நாளைக்கு 9,218 – 10,000 பயணிகள் மாத்திரமே பயணித்ததால் இந்த வருமான நிலை குறைந்துள்ளதாக டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை மற்றும் பயணிகள் பயணங்களை தவிர்த்தமை காரணமாக இவ்வாறு பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், தமது டிப்போவில் 328 ஊழியர்கள் பணிபுரிவதாகவும், அவர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதற்கு தேவையான சுமார் ரூ. 138 லட்சம் தொகையை தற்போது ஈட்டியுள்ளதாகவும் டிப்போ முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here