ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அபராதம் விதித்துள்ளது.
ஹெட்டிபொல பகுதியில் கடந்த ஜூலை 27 அன்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் நடத்திய விசேட சோதனையின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடும் கேள்வி மற்றும் வரையறுக்கப்பட்ட விநியோகம் காரணமாக மோட்டார் சைக்கிள்கள் அதிக விலைக்கு மீள விற்கப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர் ஒருவர் , சில பிரபலமான மோட்டார் சைக்கிள்களின் இருப்பு, கேள்விக்கு போதுமானதாக இல்லை என எழுத்து மூலம் அதிகார சபைக்கு அறிவித்திருந்தார்.
இதற்கமைய, நுகர்வோருக்கு நியாயமான வாய்ப்பை வழங்கும் வகையில் “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் காத்திருப்பு பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும், சிலர் வெவ்வேறு நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்டு, இறுதி நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து, ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றத்தில் 3 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மஜ்லி ஒட்டோ சிட்டி (Maljee Auto City) குருநாகலை வீதி, ஹெட்டிபொல முகவரியில் உள்ள நிறுவனத்திற்கு விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விலை 790,000 ஆக இருக்கும் நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளை ரூ. 850,000-க்கு அதாவது ரூ. 60,000 அதிகமாக விற்ற குற்றத்திற்காக ரூபாய் 10,000 அபராதம் விதித்துள்ளது.
இதேவேளை சிலாபம் வீதி, ஹெட்டிபொல முகவரியில் உள்ள பிரதீப் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு (Pradeep Motors) விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் ரூபாய் 790,000 விலையுள்ள மோட்டார் சைக்கிளை ரூ. 845,000-க்கு விற்ற குற்றத்திற்காக ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஹெட்டிபொல லக்கி என்டர்பிரைஸ் (Lucky Enterprises) நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் விலைகளை காட்சிப்படுத்தாத குற்றத்திற்காக ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நுகர்வோர் விவகார அதிகார சபை, மோட்டார் சைக்கிள்களை வாங்கும் முன் விலைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நுகர்வோரை கேட்டுக்கொண்டது. நியாயமற்ற அதிக விலை வசூலிப்பது அல்லது விலைகளை காட்சிப்படுத்தாமை தொடர்பான முறைப்பாடுகளை 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அலுவலக நேரங்களில் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.








