அவிசாவலை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலியான இலங்கை தரநிலை (SLS) சான்றிதழ் அடையாளத்தை கொண்டிருந்ததாக கூறப்படும் சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) பறிமுதல் செய்துள்ளது.
அதிகார சபையின் போட்டி மேம்பாட்டு பிரிவு அதிகாரிகளால் ஒகஸ்ட் 21 அன்று இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
இதன்போது அமித்திரிகல-ருவன்வெல்ல பகுதியில் உள்ள குறித்த குடிநீர் போத்தல் தொழிற்சாலையில் அவை தயார் செய்யப்பட்டு, விநியோகத்திற்கு முன்னதாக அவிசாவலையில் உள்ள கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
500 மில்லிலீற்றர் முதல் 19 லீற்றர் வரையிலான கொள்கலன்கள் குறித்த இருப்பில் இருந்ததாகவும், அவற்றில் போலியான எஸ்.எல்.எஸ் (SLS) அடையாளமும், சான்றிதழ் இல. 894 எனவும் அச்சிடப்பட்டிருந்ததாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்கள் சந்தைக்கு செல்லவில்லை என்றும் அதிகாரிகள் அவற்றை முழுமையாக கைப்பற்றியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்யும் போது சான்றிதழ் அடையாளங்கள் மற்றும் பொருள் தகவல்களை சரிப்பார்க்குமாறும், சந்தேகத்திற்குரிய பொருட்கள் தொடர்பில் 1977 என்கிற இலக்கத்தின் மூலம் முறைப்பாடு அளிக்குமாறும் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் நுகர்வோரை அதிகார சபை கேட்டுக்கொண்டது.






