எதிர்காலத்தில் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெல் கொள்வனவு செய்தல் நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச ஊடாக மேற்கொள்ளப்படும்.
மேலும், சிறு மற்றும் நடுத்தர அளவில் நெல் கொள்வனவில் ஈடுபடுவோருக்குக் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 125 முதல் 135 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் அரசாங்கம் நெல்லினை கொள்வனவு செய்ய வேண்டும் என மட்டக்களப்பு தமிழ் விவசாய சமூகத்தின் இணைப்பாளர் சிவலிங்கம் பரமேஸ்வரநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த விலைகளுக்கு நெல்லைக் கொள்வனவு செய்தால் மாத்திரமே இலாபத்தைப் பெறாவிட்டாலும் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 70 வீதமான மக்கள் விவசாயத்தை முன்னெடுத்து இருக்கின்றனர்.
இந்தநிலையில் ஆட்சியாளர்களை நம்பியே 2 இலட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தமிழ் விவசாய சமூகத்தின் இணைப்பாளர் சிவலிங்கம் பரமேஸ்வரநாதன் தெரிவித்துள்ளார்.








