எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகி வருகின்றன. அவற்றைப் பொறுப்பெடுத்து தரமாகவும் உரிய காலப் பகுதிக்குள்ளும் நிறைவேற்றித் தருவதற்கு தயாராகவேண்டும் என இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினரை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையின் 20ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டமும், மேன்மை விருது வழங்கல் விழாவும் முல்லைத்தீவில் நேற்று புதன்கிழமை இரவு (29.01.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் குணபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஒப்பந்தகாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் வடபிராந்தியக் கிளையின் தலைவர் ஆர்.பரமேஸ்வரன் தனது வரவேற்பு உரையில் சுட்டிக்காட்டினார். அது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தனது சிறப்பு விருந்தினர் உரையில் பதிலளித்தார்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில், ஒவ்வொரு நாட்டினதும் பிரதேசத்தினதும் அபிவிருத்தியின் பிரதான பங்களார்கள் நீங்கள். ஒவ்வொரு அபிவிருத்திச் செயற்பாட்டிலும் உங்கள் பங்களிப்பு முக்கியம். நீங்கள் ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட காலத்துக்குள் முதல் அதை தரமாக நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும். உங்களின் உந்துதல் இருந்தால்தான், நீங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான், நாமும் எமது மாகாணத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கான துணிவு ஏற்படும். நாங்கள் திட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உந்துசக்தியாக உங்களின் செயற்பாடுகள் இருக்கவேண்டும்.
நான் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் ஒப்பந்தகாரர்கள் தமது பணத்தைக் கேட்பதற்கு முன்னரே அதை வழங்குவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தேன். ஆனால் துரதிஷ;டவசமாக, நான் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் என்னைத் தொடர்ந்து வந்தவர்களால், எனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி கூட, அந்தத் திட்டங்கள் முடிவுறுத்தப்படாமல் திரும்பிச் சென்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகை தருவதற்கும் முதலிடவும் விரும்புகின்றார்கள். அவர்களது முதலீடுகள் ஊடாகவே வேலை வாய்ப்புக்கள் இங்கு அதிகரிக்கும். அவர்களின் முதலீட்டுக்கான கட்டுமானங்களையும் நீங்கள்தான் அமைத்துக் கொடுக்கப்போகின்றீர்கள்.
எமது மாகாணத்துக்கு உலக வங்கியினர் அண்மையில் வந்து சென்றிருக்கின்றார்கள். அவர்கள் மீண்டும் வருகை தரவுள்ளார்கள். எதிர்காலத்தில் மிகப் பெரிய அபிவிருத்திகள் இங்கு நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இந்த நிகழ்வில் தலைவர் தனது உரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘மணல் யாட்’ உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை நான் சாதகமாக பரிசீலிக்கின்றேன். அபிவிருத்திப் பணிகளின்போதான கட்டட நிர்மாணம் மற்றும் மக்களின் தேவைகளுக்கு மணல் அவசியமானது. மிக மிகக் குறைந்தளவு பாதிப்போடு மணல் அகழக் கூடிய இடங்களை அடையாளம்கண்டு அதைச் செயற்படுத்த முடியும்.

உங்களில் பல ஒப்பந்தகாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிதி இன்னமும் வழங்கப்படவில்லை என்பது தெரியும். அது உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான். எங்களால் முடிந்தளவு உங்களுக்கு அவற்றைப் பெற்றுத்தருவதற்கு முயற்சிகள் எடுக்கின்றோம், என்றார் ஆளுநர்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








