பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உளவுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் நிரப்பப்பட்ட பைகளின் அடிப்பாகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான குஷ் மற்றும் ஹஷிஷ் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில் ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

ஒரு அனுசரனையாளர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 ஆம் திகதி அன்று தாய்லாந்தின் பேங்கொக்கிற்குப் பயணம் செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

சந்தேக நபர்கள் (பிக்குகள்) வெளிநாட்டில் இருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களது கைபேசியில் இருந்தமை தெரியவந்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்றும், துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் சம்பவம் இது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனக் கூறப்படும் சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here