குருநாகல் பகுதியில் சட்டவிரோத பிரமிட் திட்டத்தை முன்னெடுத்து வைப்பாளர்களின் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மூவாயிரத்துக்கும் அதிகமான வைப்பாளர்களிடம் இருந்து இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு எதிராக 1,910 முறைப்பாடுகளும், 65 வங்கிக் கணக்குகள் தொடர்பிலான தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவு நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களுக்கமைய வைப்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 14 உதவி பணிப்பாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.








