இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்கள் எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 32 இந்திய மீனவர்களும் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் நேற்றிரவு மன்னார் நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகக் கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளிவிவகார அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








