மூன்றாம் தரப்பு காப்புறுதித் திட்டத்தைக் கொண்டவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் அதற்கான ஈட்டுத்தொகையை எளிதாகப் பெறும் வகையில் விதிமுறைகள் வகுக்க வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
நிதி பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
நாட்டில் காப்புறுதியை ஒரு தொழிலாக வளர்ப்பதற்கு, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு எதிர்காலத்திற்கான திட்டமொன்றைத் தயாரித்து முன்வைக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காப்புறுதி நிறுவனங்களில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை வங்கிகளினூடாக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் போதியளவு கால அவகாசத்தைப் பெற்று சம்பந்தப்பட்ட கைத்தொழில் நிறுவனத்துடன் கலந்துரையாடி ஒழுங்கு விதிகளைத் தயாரிக்குமாறு இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதேவேளை, சூதாட்ட வரி குறித்தும் இந்த குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பௌதீக ரீதியாகக் காணப்படும் சூதாட்ட விடுதிகளில் வரி அறவிடப்பட்டாலும், அதிக எண்ணிக்கையான சூதாட்ட வணிகங்கள் இணையம் மூலம் மேற்கொள்ளப்படுவதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, இணைய சூதாட்ட வணிகங்கள் மூலம் எவ்வித வரியும் வசூலிக்கப்படவில்லை என்பதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் விளக்கினார்.
இதற்காக சூதாட்ட அதிகார சபையை நிறுவுவதற்கு இந்தக் குழு பல ஆண்டுகளாக முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், இதற்கான சட்ட மூலத்தை விரைவில் பூர்த்தி செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிப்பதாகவும் அறியப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, மதுவரியை அதிகரிப்பதற்காக நிதி அமைச்சு சமர்ப்பித்த முன்மொழிவுக்கும் நிதி பற்றிய குழு அனுமதி அளித்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சிகரெட்டுகள் மீதான வரி அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதால், சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நியாயமான காரணம் தேவை என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.