தெனியாய ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்திற்கு 600 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் *(MoU)* இந்தியாவும் இலங்கையும் இன்று கையெழுத்திட்டன.

சுகாதா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த திட்டம் இந்தியாவின் “Aftermath Cyclone Ditwah Project” எனும் தித்வா சூறாவளிக்கு பின்னரான இலங்கைக்கான நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சுகாதார உட்கட்டமைப்புகளை மீளகட்டியெழுப்புவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

இதற்கமைய இடமாற்றப்பட்டுள்ள தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய உபகரணங்கள் கிடைக்கப்பெறவுள்ளன. இதன் மூலம் குறித்த வைத்தியசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு பாதுகாப்பான, உயர் தரமான மற்றும் திறமையான சுகாதார சேவை கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையிலான பல தசாப்த கால நட்பு மற்றும் ஒத்துழைப்பின் மறுஉறுதிப்படுத்தல் என்று அமைச்சர் ஜயதிஸ்ஸ இதன்போது கூறினார்.

மேலும் குறித்த நிதி உதவிக்காக இந்திய அரசாங்கத்திற்கும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த நன்கொடை மூலம், சிகிச்சை சேவைகளை கணிசமாக விரிவுபடுத்துவதோடு, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தரத்தை மேம்படுத்தல், மற்றும் மாத்தறை மாவட்டத்தில் சுகாதார சேவை வழங்கலை வலுப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய வைத்தியசாலை அமைந்துள்ள இடத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் அந்த பகுதியை விரிவாக்குவதற்கு இடமில்லாத காரணத்தினாலும்  வைத்தியசாலை இடமாற்றப்படுகிறது.

புவியியல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளை தொடர்ந்து, தெனியாய நகரில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்போர்ட் தோட்டத்தில் புதிய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

6 பில்லியன் ரூபாய் (6,000 மில்லியன் ரூபாய்) முதலீட்டில் 2 கட்டங்களாக 300 படுக்கைகள் கொண்ட நவீன வைத்தியசாலையை அமைக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

முதலாம் கட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் மகப்பேறு வார்டுகள், சத்திரசிகிச்சை அரங்குகள், தீவிர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் இரத்த வங்கி ஆகியவை அமைக்கப்படும்.

மேலும் நோயாளிகளுக்கான தனி போக்குவரத்து வழி மற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான குடியிருப்புகளும் வடிவமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கட்டுமான பணிகள் ஆரம்பமாகி 3 ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கால விரிவாக்கத்திற்கான வசதிகளுடன் கூடிய நவீன, சுற்றுச்சூழலுக்கு உகந்த, அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வைத்தியசாலையாக இது திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here