ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) இடம்பெற்றது.
இந்நிலையில், ஐ.நா.வின் அமைதிக்கான நிதியத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2 ஆண்டுகளில், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணியுடன் தொடர்புடைய முக்கிய சவால்களைத் தீர்ப்பதற்கான திட்டமாக இது அமைகின்றதென ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம், இலங்கையின் நீண்ட காலப் போர் பின்னணியில் காணிக்கான சம அளவிலான அணுகல் இல்லாமை தொடர்ச்சியான முரண்பாடுகளுக்கான மூலக்காரணமாக இருந்து வந்ததையும், மக்களின் இடம்பெயர்வு, மீளக்குடியமர்தல் மற்றும் சமூகங்களின் மீளிணைவு உள்ளிட்ட சிக்கல்களை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காணி தொடர்பான இவ்வகை நம்பிக்கையின்மை நீண்டநாள் அமைதிக்குத் தடையாகவும், சமூக மாற்றத்துக்கு இடையூறாகவும் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சவால்கள் பலதரப்பட்டவையாக உள்ளன — தனிநபர் உரிமை விவகாரங்கள், இடம்பெயர்வின் தாக்கங்கள், சமூகங்களுக்கிடையிலான வளங்களுக்கான முரண்பாடுகள், இராணுவம் கைப்பற்றியுள்ள குடியேற்ற நிலங்கள், சமூக கலந்தாய்வின்றி பாதுகாப்பு அல்லது அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிலங்கள் என வெவ்வேறு நிலைத்தன்மையற்ற சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், இடம்பெயர்ந்தோர், அகதிகள், மீண்டுவருபவர்கள், குடும்பத் தலைவியரான பெண்கள், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், இளையோர்கள் ஆகியோரது நுட்பமான நலன்கள் கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நில உரிமையில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட தடைகள், பெண்களுக்கு சட்டப்படி உரிமைகள் இருப்பினும் நடைமுறையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்தத் திட்டம் இதனை முற்றாக உணர்ந்தும் கவனத்துடனும் செயற்படுவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேலும் தெரிவித்துள்ளார்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








