முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று(31) குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இந்தியாவில் இருந்து தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யத விடயத்துடன் அவருக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியக் கடன் உதவியின் கீழ் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் இம்யூனோகுளோபின் சர்ச்சைக்குரிய மருந்துக் கொள்வனவு தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கெஹலியவினை தொடர்ந்து சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவருக்கும் சி.ஐ.டி. விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் லியனகே ஆகியோர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இந்தியக் கடன் உதவியின் கீழ் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபின் தரம் குறைந்த மருந்து கொள்வனவு தொடர்பான முக்கிய குறிப்புகள் காணாமல் போயுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் அண்மையில் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.
இந் நிலையிலேயே அமைச்சர் கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு இன்று விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை (பிப்ரவரி 01) மீண்டும் மாளிகாகந்த நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதுடன், வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது முன்னர் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட 07 சந்தேகநபர்கள் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.