இலங்கைக்கு அருகில் சர்வதேச கடல் பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களுக்கு சேவைகளை வழங்கினால் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக வெளியான அறிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட விளக்கம் அளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொட்ரிகோ இது குறித்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) என்பது குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது இலங்கையையோ இலக்கு வைத்து விதிக்கப்பட்டதல்ல, மாறாக உலகம் முழுவதும் பொதுவாக செயல்படும் அவர்களின் சாதாரண உலகளாவிய கொள்கை என்று தெரிவித்தார்.
தொடர்புடைய இரண்டாம் நிலைத் தடைகள் தொடர்பாக அமெரிக்கா ஆகஸ்ட் 24 ஆம் திகதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், அமெரிக்க தடைகளுக்கு உள்ளான கப்பல்களுக்கு சேவை வழங்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதி அமைப்பை அணுகும் வாய்ப்பு இழக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவின் பரந்த தடைக் கொள்கையின் ஒரு பகுதி என்றும், இது உலகளாவிய ரீதியில் செயல்படுத்தப்படுவதாகவும் இலங்கையை குறிப்பாக இலக்கு வைத்த நடவடிக்கை அல்ல என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இத்தகைய தடைகளுக்கு உள்ளான கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய மோதல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புவிசார் அரசியல் வளர்ச்சிகள் காரணமாக உலகின் ஏனைய கடல் பிராந்தியங்களிலும் இத்தகைய கப்பல்கள் உள்ளன என்று அவர் மேலும் தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.








