இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூபா 12 லட்சம் மோசடி செய்த நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஒருவர் என்றும், கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி இணைப்புச் செயலாளரார் போன்று நடித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகத்திற்குள் முறைப்பாட்டாளரை அழைத்துச் சென்று நம்பிக்கை ஏற்படும் வகையில் செயற்பட்டு இந்த மோசடியை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்யும் போது அவரிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்காக போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடி செயல்களை நீண்ட காலமாக செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here