மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும் நடைபயிற்சி அவசியமாக இருக்கின்றது. இதனால் மன அழுத்தம் குறைவதுடன், உடல் எடையும் குறைகின்றது.
உடல் எடையை குறைப்பவர்கள் 10 ஆயிரம் காலடிகள் நடப்பது மிகவும் நல்லதாம். அவ்வாறு நடைபயிற்சி செய்யும் நாம் செல்லும் வழித்தடத்தையும் கவனிக்க வேண்டும்.
சிமெண்ட் தரையில் அல்லது தார் சாலையில் வெறும் காலுடன் நடக்கக்கூடாது. கடினமான இடங்களில் நடக்கும் போது கட்டாயம் ஷூ அணிய வேண்டும். ஆனால் தினமும் காலையில் புல்வெளியில் வெறும் காலுடன் நடந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
நமது உடலில் பல பிரச்சனைகளுக்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாகவே இருக்கின்றது. சரியாக தூங்காமல் இருப்பதால் உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சுறுசுறுப்பு இல்லாமை போன்ற பிரச்சனை ஏற்படும். ஆதலால் தூக்கமின்மை பிரச்சனையை தவிர்க்க தினமும் புல்வெளியில் நடப்பது நல்ல பலனை அளிக்கும்.
மாதவிடாய் தருணத்தில் பல பெண்கள் வலியால் அவதிப்படுகின்றனர். மனநிலையில் மாற்றம், தலைவலி, கை கால்கள் வலி, வயிறு வலியால் அவதிப்படுகின்றனர். இவ்வாறான தருணத்தில் வெறும் காலுடன் புல்வெளியில் சிறிது நேரம் நடந்தால் வலி குறையுமாம்.
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை பல்வேறு உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். ஏனெனில் ஹார்மோன்கள் உடலை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவை சீராக இயங்க தினமும் காலை 10 நிமிடம் புல் மீது வெறுங்காலுடன் நடந்தால் ஓரளவு நிவாரணம் கிடைக்குமாம்.
செல்போன், கணினி இவற்றினை அதிகமாக பார்ப்பதால் கண்களில் அழுத்தம் அதிகரிக்கின்றது. தினமும் புல்வெளியில் சிறிது தூரம் நடந்தால், பாதங்களில் அழுத்தப்புள்ளியை செயல்படுத்துவதுடன், கண்களின் அழுத்தத்தையும் விடுவிக்குமாம்.
மேலும் வெறும் காலுடன் புல்வெளியில் நடப்பதால் உடம்பிற்கு மசாஜ் செய்வது போன்று இருப்பதுடன், ரத்த ஓட்டமும் மேம்படுகின்றது. அதுமட்டுமின்றி உடல் செயல்பாடு உடலில் காணப்படும் வலி, வீக்கத்தையும் குறைக்கின்றது.
ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், புல்வெளியில் வெறும் காலுடன் நடந்தால் மன அழுத்தத்தையும் குறைப்பதால், ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.
இவ்வாறு நடைபயிற்சி மேற்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தின் தூண்டுதலையும் மேம்படுத்துகின்றது. இதனால் உடல் ரீதியான பிரச்சனை எதிர்த்துப் போராடும் வலிமை பெருகும்.