இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் வழக்கில், பலஸ்தீனியர்களைப் பாதுகாக்கவும், காசா பகுதியில் இனப்படுகொலையைத் தடுக்கவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. உலக நீதிமன்றம் தனது வார்த்தைகளை தவறாக சித்தரித்ததாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குற்றம் சாட்டியுள்ளார்.
காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனு சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து, காசாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பலஸ்தீனியர்களுக்கு எதிரான தூண்டுதல் மற்றும் மனிதாபிமானமற்ற வார்த்தைகளுக்கு ஆதாரமாக இஸ்ரேலிய தலைவர்களின் தொடர்ச்சியான அறிக்கைகளை நீதிமன்றத்தின் தீர்ப்பு மேற்கோள் காட்டியது.
இந்த வழக்கு தொடர்பில், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் முன்வைத்த கருத்துக்கள் சர்வதேச நீதிமன்றத்தால் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“ஒரு ஆதாரமற்ற சட்ட வாதத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன், மிக மிக பகுதி மற்றும் துண்டு துண்டான மேற்கோள்களைப் பயன்படுத்தி, அவர்கள் என் வார்த்தைகளைத் திரித்த விதம் எனக்கு வெறுப்பூட்டியது” என்று ஹெர்சாக் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
அத்துடன், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் குறித்த நடவடிக்கையை சர்வதேச நீதிமன்றம் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.