வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் நிலைகொண்டிருந்த மிக்ஜான் சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கரையை ஊடறுத்துள்ளதுடன் படிப்படியாக நலிவடைகின்றதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் மேலும் கூறுகையில்,
மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும், மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்கள் காலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இதுபற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.