எதிர்வரும் வாரங்களில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்பகுதிக்கு விஜயம் செய்த போது, இரு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவைகளை துரிதமாக மீள ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.
இதன் போது அவர் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகள், வடக்கு மாகாணத்துடனான இருருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியதாக உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2023 ஜூலையில் வெளியிடப்பட்ட இருதரப்பு பொருளாதார பங்காளித்துவ தொலைநோக்கு ஆவணத்தின் மையக் கருப்பொருளான இணைப்பு முயற்சிகளை மேலும் முன்னெடுப்பதற்கு உயர்ஸ்தானிகர் இந்த பயணத்தின்போது விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.