நோர்வேயில் இலங்கை தமிழர் ஒருவர் காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெலிங்கன் நகராட்சியில் உள்ள Myrdammen என்ற இடத்தில் எரிந்த காரில் இருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த வழியாக நடந்துச் சென்ற ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், குற்றம் எதுவும் நடந்ததாக தகவல் கிடைக்கவில்லை என பொலிஸ் பணித் தலைவர் கெட்டில் லண்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த காரின் உரிமையாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் குற்றவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த மரணத்தை சந்தேகத்திற்குரியது என தெரிவித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.