இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர், நாட்டிற்குள் நுழைவதற்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
காசாவிற்கு உதவி பொருள் எடுத்து சென்ற குளோபல் சுமுத் கப்பல் குழுவிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆர்வலர்களை பென்-க்விர் கேலி செய்வதைக் காட்டும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலியப் படைகள், சர்வதேச கடல் பகுதியில் சென்ற குறித்த கப்பல் குழுவைத் தடுத்து நிறுத்தி, சுமார் 430 பேரைக் கைது செய்துள்ளன.
கைது செய்யப்பட்ட ஆர்வலர்களின், கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பென்-க்விர் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற காணொளி வெளியானது.
இந்நிலையில்,பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், இந்தத் தடையை அறிவித்தார். கப்பல் குழுவில் இருந்த பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய பிரஜைகளிடம் பென்-க்விர் காட்டிய “ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களே” இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, கனடா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இஸ்ரேலியத் தூதர்களை அழைத்து முறைப்பாடு செய்ந்துள்ளன. சமூக செயற்பாளர்கள் நடத்தப்பட்ட விதம் தவறானது என்றும், அது அடிப்படை மனித மாண்புக்கு எதிரானது என்றும் அவர்கள் கூறினர்.
இதேநேரம் பென்-க்விர் மீது தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரான்சின் வெளி விவகார அமைச்சர் பாரோட் கூறியுள்ளார்.







