பண்டாரவளை – அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவுக்குட்பட்ட உடுகும்பல்வெல வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியின் புல்வெளியில் இன்று (18) தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், தியத்தலாவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதிக்குள் தீ பரவுவதைத் தடுக்க, வன பாதுகாப்பு அதிகாரிகள் தீ தடுப்பு வேலிகளை வெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பலத்த காற்று, வறண்ட நிலை, மற்றும் செங்குத்தான சரிவுகள் ஆகியவை தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் பெரும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








