அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை (26) மெல்பேன் கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டி 4 ஆவது நாளான நேற்று முடிவடைந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மார்னஸ் லபுசேன் (Marnus Labuschagne) 63 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா (Usman Khawaja) 42 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் ஆமெர் ஜமால் (Aamer Jamal) 3 விக்கட்டுக்களையும், மிர் ஹம்ஷா (Mir Hamza), ஸஹீன் அப்ரிடி (Shaheen Afridi) மற்றும் ஹசன் அலி (Hasan Ali) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 246 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
பாகிஸ்தான் சார்பாக துடுப்பாட்டத்தில் அப்துல்லாஹ் ஸபீக் (Abdullah Shafique) 62 ஓட்டங்களையும் ஸான் மசூந்த் (Shan Masood) 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) 5 விக்கட்டுக்களையும், நாதன் லியோன் (Nathan Lyon) 4 விக்கட்டுக்களையும் மற்றும் ஜோஸ் ஹஷ்ல்வூட் (Josh Hazlewood) 1 விக்கட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
54 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 262 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக மிட்சல் மார்ஸ் (Mitchell Marsh) 96 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெரீ (Alex Carey) 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மிர் ஹம்ஷா (Mir Hamza) மற்றும் சஹீன் அப்ரிடி (Shaheen Afridi) ஆகியோர் தலா 4 விக்கட்டுக்களையும், ஆமெர் ஜமால் (Aamer Jamal) 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்கள்.
317 என்ற வெற்றியிலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 237 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக ஸான் மசூந்த் (Shan Masood) 60 ஓட்டங்களையும், சல்மான் அலி ஆகா (Salman Ali Agha) 50 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றனர்.
பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) 5 விக்கட்டுக்களையும், மிட்சல் ஸ்டார்க் (Mitchell Starc) 4 விக்கட்டுக்களையும் மற்றும் ஜோஸ் ஹஷ்ல்வூட் (Josh Hazlewood) 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக போட்டி முழுவதும் மொத்தமாக 10 விக்கட்டுக்களையும், 29 ஓட்டங்களையும் பெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய தொடரில் முன்னிலையில் உள்ளது.
தொடரின் 3 ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் புதன் கிழமை (03) சிட்னி கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.