பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிசாரின் கடமை எனவும் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்
எனவும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தெல்லிப்பழையில் இடம்பெற்ற சம்பவம் போல யாழ்ப்பாணத்தில் இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்க முடியாது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவினர் இணைந்து கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் மீட்டுள்ளனர்.
சில குழுவினர்களுக்கு இடையே இருந்து வரும் பகைமையின் காரணமாகவே இவ்வாறான வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுவோர் பொலிசாரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
அதே போல யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவ்வாறு யாராவது செயற்பட்டால் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கையினை நாம் முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு போலீசார் தொடர்ச்சியாக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.