வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்தவுடன் விலைகள் உயரும் நிலை ஏற்படும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர் “நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய நான்கு வருடங்களாக காத்திருக்கிறோம். வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் எப்போது இறக்குமதி செய்யப்படும் என்ற திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இறக்குமதி தொடர்பாக படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். வாகனங்களை நாங்கள் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் சுமார் 200 வீத வரிகளை விதிக்கிறது,”
வாகன இறக்குமதியின் போது பஸ்கள் மற்றும் லொறிகள் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் வேன்கள் கடைசியாக பரிசீலிக்கப்படும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
வாகன இறக்குமதி தொடர்பான வாக்குறுதி ஒரு சூழ்ச்சி என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எம்.பி. மற்றும் அமைச்சர்களின் தேவைகளுக்காக சில வாகனங்களை நாடாளுமன்ற சபாநாயகர் கோரியுள்ளார்.
“வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கினாலும், குறிப்பிடத்தக்க விலை குறைப்பு சாத்தியமில்லை. உண்மையில், இடைக்காலத்தில் விலைகள் அதிகரிக்கலாம் என்ற கவலை உள்ளது,” என பிரசாத் மானேகே மேலும் தெரிவித்திருந்தார்.