அம்பாறைக்குச் செல்லும் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற சாரதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இன்று காலை குறித்த பேருந்து வெல்லம்பிட்டிய வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பேருந்து சாரதி உயிரிழந்தார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அம்பாறை SLTB பணிமனையில் பணியாற்றும் 44 வயதான சாரதி என அடையாளம் காணப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார் என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து அதிகாலை 5.30 மணியளவில் புறப்பட்ட பேருந்து, வெல்லம்பிட்டியவில் உள்ள அம்பகஹ சந்தி அருகே விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு பெண் பயணியை ஏற்றுவதற்காக சாரதி பேருந்தை நிறுத்தியபோது, சாரதி திடீரென மயங்கி விழுந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் பேருந்து நிலையம், தொலைபேசி கம்பம், நுழைவாயிலொன்று, சுவரொன்று மற்றும் பேருந்தின் முன்பகுதி ஆகியவையும் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில், பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்தனர் எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.







