ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கங்களால் நாட்டை நீண்டகாலம் ஆள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் ஊடகத்துறை அமைச்சர் ஊடகமொன்றை விமர்சித்து அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இதன் பொருள் அரசாங்கம் ஊடக அடக்குமுறைக்குத் தயாராகிறது என்பதாகும்.தங்களை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் விரும்புகிறது.
அண்மையில் பிரதியமைச்சர் ஒருவரும் ஹிரு ஊடகத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஊடகங்கள் வாய்திருக்காமல் மௌனமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.
இவ்வாறு ஊடகங்களை அடக்குவதற்கு எத்தணிக்கும் அரசாங்கங்களால் நீடித்து நிலைக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலையில் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறித்தும் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவித்தார்.
தாமும் துமிந்த சில்வாவும் சில காலம் ஒரே காலப்பகுதியில் சிறையிலிருந்ததாகவும் அதன்போது அவருக்கு எந்த சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலையில் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுவதை சிறைச்சாலைகள் திணைக்களம் முற்றாக நிராகரித்திருந்ததையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.








