அம்பாறை பகுதியில் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட அதிகூடிய சில்லறை விலை 255 ரூபாவாக காணப்பட்ட நிலையில், அந்த அரிசி இரண்டு கிலோகிராம் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரியொருவருக்கு 560 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் அரிசி 280 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், நிர்ணயிக்கப்பட்ட அதிகூடிய சில்லறை விலையை விட ஒரு கிலோகிராமிற்கு 25 ரூபாய் அதிகமாக அறவிடப்பட்டுள்ளதுடன், இரண்டு கிலோகிராம் அரிசிக்காக மேலதிகமாக அறவிடப்பட்ட மொத்தத் தொகை 50 ரூபாவாகும்.
2025 ஒக்டோபர் 21 ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் 2459/12 விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள கட்டளை இலக்கம் 94 இன் பிரகாரம், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் அதிகூடிய சில்லறை விலை 255 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டளையை மீறியமை தொடர்பில், 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் தொடர்புடைய ஏற்பாடுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் கொள்வனவு செய்யப்பட்ட அரிசிப் பொதி, கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய பணம் மற்றும் ரசீது உள்ளிட்ட வழக்குப்பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதற்கமைய, அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் 2026 ஒக்டோபர் 22 ஆம் திகதியன்று இந்த வழக்கிற்காக 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.








