தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகக் குறைந்த பசி குறியீட்டு மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளது என 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டில் (GHI) தெரிவிக்கப்பட்டுள்ளது, இது கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டின் பசி நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

அக்டோபர் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையின்படி, இலங்கை 10.2 மதிப்பெண்களைப் பதிவு செய்து, உலகளவில் மதிப்பிடப்பட்ட 122 நாடுகளில் 53வது இடத்தில் உள்ளது.

தெற்காசிய நாடுகளில், நேபாளம் 14.5 மதிப்பெண்களுடன் இரண்டாவது குறைந்த மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து வங்காளதேசம் 19.2, இந்தியா 24.1, பாகிஸ்தான் 25.5 மற்றும் ஆப்கானிஸ்தான் 28.6 என பதிவு செய்துள்ளன.

போதிய தரவு இல்லாத காரணத்தால் பூட்டான் மற்றும் மாலைதீவுகளுக்கு அறிக்கை மதிப்பெண்களை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பசி குறியீட்டு மதிப்பெண் 2000 ஆம் ஆண்டில் 22.1 இல் இருந்து 2006 இல் 19.9 ஆகவும், 2012 இல் 20.8 ஆகவும், 2018 இல் 11.4 ஆகவும், 2026 இல் 10.2 ஆகவும் குறைந்துள்ளது.

முன்னேற்றம் இருந்தபோதிலும், இலங்கை மிதமான பசி பிரிவில் தொடர்ந்தும் காணப்படுகிறது எனவும், இது உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து சவால்கள் தொடர்ந்து இருப்பதைக் குறிக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் தொகையில் 4.9% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10.1% பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 9.3% பேர் இளைத்துப் போனவர்களாகவும் இருப்பதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதேநேரம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 0.6% ஆக உள்ளது.

உலகளாவிய பசி குறியீடானது நான்கு குறிகாட்டிகளைப் பயன்படுத்தி பசியை அளவிடுகிறது: ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி குன்றுதல், குழந்தைகள் இளைத்துப் போதல் மற்றும் குழந்தை இறப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விடயம் மதிப்பிடப்படுகிறது.

உலகளவில், மோதல்கள், காலநிலை அதிர்ச்சிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால முன்னேற்றத்தைத் தொடர்ந்து பசி மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக 2026 அறிக்கை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here