தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

மக்கள்விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எமது நாட்டில் தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. நீங்களும் பல கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். உங்களுடடைய வாக்குகளால் பல அரசுகள் உருவாகியிருக்கின்றன.

ஆனால், அந்த அரசாங்கங்களால் இலங்கையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். யுத்தம் உருவானது. கல்வி, சுகாதாரம் அழிந்தது.

இத்தனைக்கும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் பிரச்சினைகளை சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் வளர்ச்சி அடைந்தார்கள். பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்தார்கள்.

அதனால்தான் மாற்றம் தொடர்பில் சிந்திக்க வேண்டி உள்ளது. அவ்வாறான மாற்றத்தை உருவாக்க வேண்டும். விசேடமாக வடக்கில் உள்ள மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.

இன்று ஆட்சி மாற்றம் தொடர்பில் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இந்த தேர்தலில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என மக்கள் சிந்திக்கின்றனர்.

நீங்கள் அறிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினரிடம் கேட்டுப்பாருங்கள். தபால்மூல வாக்களிப்பில் 80 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த தேர்தலில் தென்னிலங்கையில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, வடக்கு மக்களும் அந்த வெற்றியில் எம்முடன் இணைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here