சீரற்ற காலநிலையால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குமாறு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் இதுபோன்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், அதற்கான துல்லியமான தரவுகளை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.
இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் படி மண்சரிவுகளினால் ஆயிரத்து 289 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 44 ஆயிரத்து 574 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இதன் சுட்டிக்காட்டினர்.
டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







