அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என அதன் தலைவர் மசாடோ கண்டா உறுதியளித்துள்ளார்.
டித்வா சூறாவளி காரணமாக இலங்கை பாரிய அழிவை சந்தித்திருந்தது. இந்த நிலையில் இலங்கை உட்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கான நதியுதவிகுறித்த அறிவிப்பை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
இதன்படி, அனர்த்த நிவாரண மானியமாக 3 மில்லியன் அமெரிக்க டொலர்க்கு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் தலா 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களிடமிருந்து விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அனர்த்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளையும் அழிவுகளையும் எண்ணி ஆழந்த வருத்தமடைவதாகவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.
உயிர்களைக் காப்பாற்றவும், சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவிகளை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை வழங்கி இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய அரசாங்கங்களுக்கும் இணைந்து விரைவாகவும் ஒத்துழைப்புடனும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மானியங்கள் அவசரகால மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளதெனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா தெரிவித்தார்.
இயற்கை இடர்களால் ஏற்படும் பாரிய அனர்த்தங்களின் உடனடிப் பாதிப்புகளின் போது உயிர்காக்கும் நோக்கங்களுக்காக வளரும் உறுப்பு நாடுகளுக்கு விரைவான மானியங்களை வழங்கும் ஆசிய பசுபிக் அனர்த்த நிவாரண நிதியத்திலிருந்து இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
இலங்கை மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாரிய உயிர்ச் சேதங்களும், சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியம் முழுவதும் உள்ளடக்கிய, நெகிழ்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு முன்னணி பலதரப்பு அபிவிருத்தி வங்கியாக ஆசிய அபிவிருத்தி வங்கி திகழ்கிறது.
சிக்கலான சவால்களைத் தீர்க்க தனது உறுப்பினர்கள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, வாழ்க்கையை மாற்றியமைக்கவும், தரமான உட்கட்டமைப்பை உருவாக்கவும், நிதியியல் கருவிகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளைப் பயன்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.








