அமைச்சர் ஆனந்த விஜயபாலவும், தே.ம.ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தத்திற்கு கோழைத்தனமாக தலைவணங்குவதாக இலங்கைத் தமிழரசு கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டபோது, அரசு இனவாத நோக்கம் இல்லாமல் சரியான நடவடிக்கை எடுத்ததாக சிலர் கருதியதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சில மணி நேரங்களிலேயே அமைச்சரின் நாடாளுமன்ற அறிவிப்பு அந்த நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக சிலை அகற்றப்பட்டதாகவும், அது இன்று மீண்டும் நிறுவப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருப்பது, சமத்துவத்தின் மீதான அரசின் வாக்குறுதியை தகர்த்தெறிந்த நடவடிக்கை என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தே.ம.ச. அரசு, முந்தைய அரசுகளைப்போலவே சிங்கள-பௌத்த பேரினவாத அரசாக தன்னை நிறுவிக் கொண்டுள்ளதாக சுமந்திரன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் நலனுக்காக, தே.ம.ச. அரசில் உள்ள அனைத்து தமிழ் உறுப்பினர்களும் — குறிப்பாக திருகோணமலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா — உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here