வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள அர்னாப்’ARNAB’ சூறாவளி காரணமாக கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (26) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 12 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய மற்றும் அதனை அண்டிய தென்கிழக்கு கடற்பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை அர்னாப்’ARNAB’ சூறாவளியாக வளர்ச்சியடைந்துள்ளதாக அத்திணைக்களம் தெரிவிக்கிறது.
அந்த காற்றழுத்த அமைப்பு மேற்கு நோக்கி சாய்ந்து வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இன்று இரவு 11.30 மணியளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் அது மேலும் வளர்ச்சியடைந்து தீவிர சூறாவளியாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே தொடர்புடைய கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் அலைகள் 3 முதல் 4 மீட்டர் உயரம் வரை உயரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
அதன்படி, வடக்கு அட்சரேகை 10 முதல் 20 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 95 வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும், தொடர்ந்து வெளியாகும் வானிலை அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.








