ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி அதிலிருந்த ஏ.ரி.எம். அட்டையை எடுத்து அதன்மூலம் 20ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் எடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹாஓயா சிவில் பாதுகாப்புப் படை முகாமில் பணிபுரியும் 41 வயதுடைய புதிய மெதகம, தியவிட்டகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 01ஆம் திகதி ஹோபரிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பை திருடப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டுக்கமைய கிராந்துருகோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபர், தெஹியத்தகண்டிய நகருக்கு மற்றுமொரு நபருடன் சென்று பணம் எடுத்துச் செல்லப்பட்டதை உறுதிப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக கிராந்துருகோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுதேஷ் சதுரங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here