பெருமளவிலான கைபேசிகள் மற்றும் மின்கலங்களைக் கடத்த முயன்ற சீன நாட்டினர் மூவரை ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் நேற்று (19) கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின்போது 5,140,000 ரூபாய் (சுமார் 51 இலட்சம்) மதிப்புள்ள கைபேசிகளும் 140 மின்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இவை சைபர் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட கூடியவை என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பசுமை வழியூடாக பொருட்களைச் சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயன்றபோது, ​​34 வயதுப் பெண் ஒருவர் மற்றும் 35 வயதுடைய இரண்டு ஆண் சந்தேக நபர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகரிகளின் சோதனைகளில், மிட்டாய்கள் மற்றும் சொக்லேட்டுகளுக்கு மத்தியில் சந்தேகத்திற்கிடமான ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில், ஆடைக்கு அடியில் அணியப்பட்டிருந்த, பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மேலாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலதிக சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அத்துடன் பெண்ணின் காலணிகளின் அடிப்பகுதியிலும், மற்றொரு ஆண் பயணியின் பயணப் பையிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் சில கைபேசிகள் கண்டெடுக்கப்பட்டன.

இவ்வாறு மொத்தமாக, 87 கைபேசிகளும் 140 மின்கலன்களும் மீட்கப்பட்டன. சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here