இலங்கையில் தொடரும் டொலர் நெருக்கடியைச் சமாளிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டில் மற்றொரு பொருளாதார வீழ்ச்சியைத் தாம் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதைய நிலைமையைக் கையாள்வதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
“எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,”என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
உடனடி நடவடிக்கைகளில் எரிபொருள் நுகர்வைக் குறைத்தல், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவுகளைக் குறைத்தல் ஆகியவை அடங்கும்.
இதேநேரம் நாட்டிலிருந்து டொலர்கள் வெளியேறுவதை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் குறுகிய கால அவகாசமே இருப்பதால் அதை நாம் வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்,” என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், பிற நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டொலர் வலுவடைவது இலங்கை ரூபாவின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் தொழிலாளர் அனுப்பும் பணம் ஆகிய அனைத்தும் சரிவைக் காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 29 சதவீதம் குறைந்துள்ளது என்றும், அதே நேரத்தில் ஏற்றுமதி வருவாயும், வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணமும் சரிந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெப்ரவரியில் 98 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த எரிபொருள் இறக்குமதி, மார்ச்சில் 216 மில்லியன் அமெரிக்க டொலராகவும், ஏப்ரலில் 368 மில்லியன் அமெரிக்க டொலராகவும், மே மாதத்தில் 522 மில்லியன் அமெரிக்க டொலராகவும் கடுமையாக அதிகரித்து, அரை பில்லியன் என்ற அளவைத் தாண்டியுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த அதிகரிப்பு, டொலருக்கான தேவையை மேலும் அதிகரித்து, ரூபாவின் மதிப்பைக் குறைத்துள்ளது என்று அவர் கூறினார்.
“குறுகிய காலத்தில் டொலருடனான பெறுமதி இடைவெளியை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாட்டில் மற்றொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என்றும் ஜனாதிபதி திசாநாயக்க மேலும் கூறினார்.








