வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு தடவைகள் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவு விடயத்தில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, அந்தக் குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை வங்கியின் “நிதிகளைத் திரும்பப் பெறுதல்” அறிவிப்பை நாமல் ராஜபக்ஷ ஆதாரமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
X தள பதிவின் ஊடாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“கணினிப் பிழை” காரணமாக 263 மில்லியன் ரூபாய் தவறுதலாக ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பப்பட்டது என்று வங்கி அறிவிப்பொன்று தெரிவிக்கிறது. அதில், 51 மில்லியன் ரூபாய் மேலும் காணாமல் போயுள்ளது. அவற்றுக்கு கணக்கு காட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
263 மில்லியன் தவறுதலாக வெளியே சென்றதாக இலங்கை வங்கி ஏற்று கொண்டால், அதை அரசாங்கம் எவ்வாறு “ஆதாரமற்றது” என்று கூற முடியும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக நிதியமைச்சில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹெக்கர்களால் களவாடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, அரசாங்கம் வெளிப்படையாக இருப்பதற்குப் பதிலாக சம்பவங்களை மறுத்து வருவதாக நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








