2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தாயையும் அவரது நண்பரையும் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட  பெண்ணும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்புப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை விற்கப்பட்டதாக தர்மபுரம் கிராம அலுவலர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் நான்கு வயது மூத்த சகோதரிக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக பணம் திரட்டவே குழந்தையை விற்றதாக சந்தேக நபர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பணத்தில் இருந்து 15,000 ரூபாவை கைபேசி கொள்வனவு செய்ய குறித்த தாய் பயன்படுத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் கைபேசி வாங்கியது குறித்து விசாரித்தபோது, ​​சந்தேக நபர்கள் விளக்கம் அளிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 27 மற்றும் 31 வயதுடைய தாயும் அவரது நண்பரும் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு குழந்தையை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படும் பெண், கட்டுநாயக்க, அவரயவத்தவைச் சேர்ந்த 37 வயதுப் பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும், ஆண் சந்தேக நபரும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here