ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை நீண்ட காலத்திற்குக் கொள்வனவு செய்யப்போவதில்லை என, இந்தியப் பிரதமர் தமக்கு உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்தியாவால் அதனை உடனடியாகச் செய்ய முடியாது என்றும், பிரதமர் மோடி தம்மிடம் கூறியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுகின்றமை, ரஷ்யா யுக்ரைனுடனான போரைத் தொடர்வதற்குக் கூடுதலாக வழி வகுத்துள்ளதாக ஏற்கனவே ட்ரம்ப் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்து, நீண்ட நாட்களாக அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் ட்ரம்பின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருப்பினும், ட்ரம்பின் புதிய அறிவிப்பு தொடர்பில் இந்தியா எவ்விதக் கருத்துகளையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.