தெல்தெனியவில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் இயன் மருத்துவரின் மரணம் தொடர்பாக, பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, யாழ்ப்பாணத்தில், ​​43 வயதான பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தையுடன் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த 49 வயதான சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மூன்று முக்கிய சந்தேக நபர்களை 48 மணி நேரத்திற்கு காவலில் வைத்து விசாரிக்க நுவரெலிய நீதவான் புத்திக ஹர்ஷனி தர்மதாச அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி இருந்தார்.

நாரம்மலையைச் சேர்ந்த 43 வயதான ஜெயசுந்தர முதியன்செலகே சம்பிக ஸ்ரீயன் ஜெயசுந்தர என்ற பிரதான சந்தேக நபர், அவரது 35 வயதான மனைவி ரத்நாயக்க முதியன்செலகே நேத்மி அமய ரத்நாயக்க, மற்றும் சந்தேக நபர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் 49 வயதான சாரதி ஜெயசிங்க அரச்சிக ரஜித சலிய சமரசிங்க ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர்.

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பேருந்தில் பயணித்தபோது, ​​புதன்கிழமை (24) அன்று யாழ் கைத்தடிப் பகுதியில் தம்பதியினரைக் கைது செய்து பின்னர் நுவரெலியா காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தம்பதியினருக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூராட்சி சபையில் பணியாற்றும் சாரதியும் புலனாய்வாளர்கள் பின்னர் கைது செய்தனர்.

இந்த நிலையில் கண்டி குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பணியாற்றும் ஒரு பிரதம ஆய்வாளர் வியாழக்கிழமை இரவு (25) கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்த விசாரணை விரிவடைந்தது. பிரதான சந்தேக நபரின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் அந்த அதிகாரி, சந்தேக நபர், கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அடைக்கலமும் உதவியும் வழங்கியதாக பொலிஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நுவரெலிய பிரிவின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க, பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருந்தபோது தனது குடும்பத்துடன் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர் பிடிபடாமல் இருப்பதற்காக நெடுந்தூரப் பேருந்துப் பயணங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் தற்காலிகத் தங்குதல்களைப் பயன்படுத்தி, பின்னர் அறிமுகமானவர்களின் வீடுகளுக்கு இடையில் மாறி மாறி நாட்டிற்குள்ளேயே தங்கியிருந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு தேவையான நிதி இல்லை என்றும், அவர் இலங்கைக்குள் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயற்சித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here