சட்ட விதிமுறைகளுக்கமைய கட்டாயமாக அடங்க வேண்டிய விபரங்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட பொதி உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சூப்பர்மார்கெட் ஒன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சோதனை நடத்தியுள்ளது.
சோதனையின் போது, நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை, தயாரிப்பு எண், உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகள், மற்றும் மூலப்பொருட்கள் பட்டியல் போன்ற முக்கிய விபரங்கள் அற்ற பொருட்களின் இருப்பை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அத்துடன் வெளிநாட்டு மொழிகளில் மாத்திரமே லேபளிடப்பட்டிருந்த அந்தப் பொருட்களில், நுகர்வோர் எளிதில் அணுகக்கூடிய வகையில் அத்தியாவசிய தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நிறுவனம் தொடர்பில் அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்ததும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயற்பாடுகள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதோடு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என அதிகார சபை எச்சரித்துள்ளது.








