நாட்டில் இந்த வருடம் இதுவரை எலிக் காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோயால் சுமார் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருவமழை மற்றும் பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதால் இந்நோய் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் துஷாரி தபரேரா கூறுகையில், இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 300 பேர் எலிக் காய்ச்சலால் உயிரிழப்பதாக தெரிவித்தார். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாகலாம் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்த வருடம் அதிகளவு நோயாளர்கள் இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.
நோய் எவ்வாறு உருவாகிறது?
எலிகள் மற்றும் விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட நீர் அல்லது மண் மூலம் இந்த பக்டீரியா பரவுகிறது. உடலில் உள்ள காயங்கள், வெட்டுக்கள் வழியாக இது உடலுக்குள் செல்லும். வயலில் வேலை செய்பவர்கள், வெள்ள நீரில் நிற்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.
அறிகுறிகள் :
காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, கடுமையான தலைவலி, கால் மற்றும் பாதங்களில் தசை வலி, கண்கள் சிவத்தல். இது டெங்கு, காய்ச்சல் போல காணப்படும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
சேற்றில் / வயலில் வேலை செய்யும் போது காலணி, கையுறை அணியுங்கள். காயங்களை நீர் புகாதவாறு மூடி வைக்கவும். மருத்துவ ஆலோசனைப்படி தடுப்பு மருந்து பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.








