இலங்கையில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரோபோ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
கொழும்பு ஆசிரி சத்திர சிகிச்சை வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களால் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேம்பட்ட ரோபோ தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்டன.
இதில் ஒன்று 50 வயதுடைய பெண்ணின் கருப்பையை அகற்றும் சிகிச்சையாகும். மற்றது சிக்கலான சிறுநீரக அறுவை சிகிச்சையாகும்.
குறித்த ரோபோ அமைப்பு தானாக இயங்காது என்றும் வைத்தியரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைமை மூலம்,சிறப்பு கட்டுப்பாட்டு கன்சோல் மூலம் வைத்தியர்கள் ரோபோ கரங்களை வழிநடத்தி, அதிக துல்லியத்துடன் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
AI மற்றும் மேம்பட்ட நிரலாக்கம் மூலம் மிகவும் துல்லியமான அசைவுகளை இந்த அமைப்பு செய்வதாகவும், இதனால் சிக்கலான சிகிச்சைகளின் துல்லியம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆசிரி சத்திர சிகிச்சை வைத்தியசாலையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி டொக்டர் சமந்தி டி சில்வா கூறுகையில், ரோபோ உதவியுடனான அறுவை சிகிச்சையால் இரத்த இழப்பு குறைவு, சிறிய வெட்டுக்கள், தொற்று அபாயம் குறைவு, விரைவான குணமடைதல் மற்றும் அறுவை சிகிச்சை பிழைகள் மிக குறைவாக இடம்பெறுதல் போன்ற பல நன்மைகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.








